January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விமல் வீரவன்சவின் மனைவி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தனக்கும், தனது மகளுக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவித்தே அவர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

தானும், பிள்ளைகளும் அரசியல் நடவடிக்கைகளுடன் எந்த வகையிலும் தொடர்புபடாத நிலையில், சிலர் தங்களையும் தவறாக விமர்சித்து வருவதாகவும், இதனால் இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறும் கோரியே முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக சஷி வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிக்கவும் கண்காணிக்கவும் எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் நேரடியாக அரசியல்வாதிகளை விமர்சிக்க துணிச்சல் இல்லாதவர்கள் மனைவி, பிள்ளைகளை அவதூறு செய்வது கீழ்த்தரமானதும் வெட்கப்பட வேண்டியதுமான செயற்பாடு என சஷி வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளால் தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவி குறித்து கருத்து வெளியிட்டதை தொடர்ந்து விமல் வீரவன்சவுக்கு எதிராக அந்தக் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.