முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என்று தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அங்கு ஜவரி 18 ஆம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்தில் அகழ்வாராய்சி குழுவொன்றினால் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கத்தை ஒத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அநுராதபுர காலத்தில் அங்கு பௌத்த தூபிகள் இருந்துள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய சிதைவுகளே மீட்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அங்கு நடத்தப்பட்டு வரும் ஆய்வுப் பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.