File Photo
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பில் உள்ள வீட்டில் இன்று மாலை ஒன்றுகூடி முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
வாசுதேவ நாணயக்கார, உதயகம்மன்பில, தயாசிறி ஜயசேகர, திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
விமல் வீரவன்சவுக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நியமிக்க வேண்டுமென்று வீரவன்ச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டதை தொடர்ந்து, அதற்கு எதிராக அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள கட்சியினர் அவரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை வீரவன்சவின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பில, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு விமல் வீரவன்ச பெருமளவு பங்களிப்பு வழங்கியுள்ளார். அதனை இல்லையென்று எவரேனும் கூறினால் அவர்களை நன்றி மறந்தவர்களாகவே பார்க்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள சென்றிருந்த வாசுதேவ நாணயக்கார ஊடகவியலாளர்களிடம் கூறும் போது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்களிடமிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே இன்று 12 கட்சியினரும் கூடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.