July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு இலங்கையில் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம்’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால், சர்வதேச நீதிமன்றத்தை நாடத் தயாராக உள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் குறைபாடுகள் இருப்பதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, பேராயர் மெல்கம் ரஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் சர்வதேச நீதிமன்றத்தில் நீதி கேட்டுச் செல்லும் நிலைமையொன்றை இலங்கையின் தலைவர்கள் உருவாக்க மாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றதாகவும், இவ்விடயங்களின் உண்மைத் தன்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காலம் தாழ்த்த முடியாதென்றும், விசாரணை அறிக்கையின் பிரதியொன்று தமக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தொடர்பில் தேடுவதைப் போன்றே, தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களின் தகவல்களும் கண்டறியப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு ஏன் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதாகவும், அவர்கள் இனியும் பொறுமையாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.