இலங்கைக்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பௌத்த மகா சங்கத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நாட்டுக்கு எதிரான ஜெனிவா தீர்மானங்கள் குறித்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மகா சங்கத்தினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்று நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளுக்கிடையே இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற நிலையில், எமது நாட்டை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் தவறான கருத்துக்களை உள்ளடக்கி மிக மோசடியான முறையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இதுபோன்ற சூழ்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பிப்பது பொருத்தமற்றது என்றும், அதற்கு பதிலாக எமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் அறிக்கையொன்றை மாத்திரம் முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் நாட்டை பிரிப்பதே எனவும், மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போர்க்குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும் எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள பௌத்த நாடுகளுக்கு நமது தேரர்களின் ஊடாக அழுத்தங்கொடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த விடயத்தில் கால அவகாசத்திற்கு உடன்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும், எவ்வளவு விளக்கமளித்தாலும் மாறாத நிலைப்பாட்டிலுள்ள நாடுகளினாலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள நெதகமுவே விஜய மைத்திரி தேரர், இலங்கைக்கு தேவையான சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரின் கருத்திற்கு இணங்கி செயல்படாத தூதரக சேவையை பலப்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் கருத்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர், எவ்வாறான சவால்களுக்கு நாடு முகங்கொடுத்தாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மகா சங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.