இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக நேற்று பிரதமர் திட்டவட்டமான அறிவிப்பொன்றைச் செய்துள்ள நிலையில், தீர்மானத்தை மீண்டும் நிபுணர் குழுவின் பக்கம் தள்ளுவது பிரதமரை அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை நிபுணர் குழுவே மேற்கொள்ள வேண்டும் என்று கொரோனா தடுப்பு தொடர்பான அமைச்சர் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இக்கட்டான நிலையில், சிறுபான்மையினர் மற்றும் நல்லிணக்கத்தைப் புரிந்துகொண்டு, ஒரு புதிர்ந்த அரசியல்வாதியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே தாம் பிரதமரின் தீர்மானத்தைப் பார்க்கின்றதாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியாத, போலி விஞ்ஞானிகளைக் கொண்ட நிபுணர் குழுவுக்கு இந்த விடயம் மீண்டும் தள்ளப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீர்மானமொன்றை மேற்கொள்வதில் பிரதமரைவிடச் சிறந்தவர் யார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுகாதார அமைச்சில் உள்ள நிபுணர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் நாட்டில் தேவையற்ற இன ரீதியான பதற்றங்களை ஏற்படுத்துவதாகவும் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.