January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் அறிவிப்பு கிடைக்கவில்லை’: சுகாதாரத்துறை

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், தமக்கு அதுகுறித்து எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கோ அல்லது சுகாதார அமைச்சின் செயலாளருக்கோ கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்க வேண்டுமென்ற வர்த்தமானி அறிவித்தல் திரும்பிப் பெறப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அடக்கம் செய்வதை அனுமதித்து, புதிய வர்த்தமானி வெளியிடப்படும் வரை தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.