July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘குருந்தூர் மலையில் பல்லவர் கால தாரா லிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவு மீட்கப்பட்டுள்ளது’

Photo: Twitter/ Shritharan Sivagnanam

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை கொண்ட தொல்லியல் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உருவம், பல்லவர் காலத்திற்குரிய எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கத்தை ஒத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் கடந்த 18 ஆம் திகதி முதல் தொல்லியல் ஆய்வுக் குழுவினால் அகழ்வாராச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்போது தொல்லியல் சிதைவுகளில் சிவலிங்கத்தை ஒத்த உருவமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அது தொடர்பாக ஆய்வு நடத்திவரும் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சிறிதரன் எம்.பி, குறித்த உருவம் பல்லவர் காலத்திற்குரிய லிங்கத்தை ஒத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதனை ஒத்த லிங்கமொன்று தமிழ்நாடு கும்பகோணம் கூந்தூர் முருகன் ஆலயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.