
இலங்கையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இரண்டாவது நாளாகவும் 900 ஐ தாண்டியுள்ளது.
இன்றைய தினத்தில் 955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்க 72,174 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களில் நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்த எண்ணிக்கையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
591 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 591 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 65,644 பேர் குணமடைந்துள்ளதுடன், 5788 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் 21 பேருக்கு தொற்று
வடக்கு மாகாணத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 776 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை கோரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒருவருக்கும, உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைத் துறை மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், மன்னார் நானாட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.