இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்களே என்றும் ஒரு தமிழர்கூட இல்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பாகும் என்று அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 47 பேரில் 17 பேர் தமிழ் பேசுவோர் என்றும் அப்போது முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றவர்களும் தமிழர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் ஒரு தமிழர்கூட சித்தியடையவில்லை என்பதனை தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணக்காளர் சேவைப் பரீட்சையில் அதிகமான தமிழர்கள் சித்தி பெற்று விட்டார்கள் என்பதற்காக அந்தப் பரீட்சையையே நிறுத்திய நாட்டிலும், ஆட்சியிலும்தான் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.