திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
திருகோணமலை நகரின் மத்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200இற்கும் அதிகமான மீனவர்கள் கலந்துகொணடிருந்தனர்.
இதன்போது டைனமைட் பாவனை, தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட பிரதேசங்களில் மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உரிய அதிகாரிகள் தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்கின்றமை குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு எதிராக இலங்கைக் கடலோரக் காவல்படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியன எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தமது பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு தீர்வுகள் கிடைக்காவிடின் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவும் தயாராகவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.