பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை மேற்பார்வை செய்து, அவர்களின் பொருளாதார தரத்தை உயர்த்துவதுவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் மிக முக்கியமான பொறுப்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனிடம் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிரிக்கெட் அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை அரவிந்த டி சில்வா தலைமையிலான தொழில்நுட்பக் குழு முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை விடவும், பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமையே பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பயிற்றுவிப்பாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முதலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் எல்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும், கரப்பந்தாட்டம், கபடி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கும் எல்பிஎல் போன்ற லீக்களை நடத்த எதிர்பார்ப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.