October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணி தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவும்’: ஜனாதிபதியிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை நியமனம் செய்துள்ளதை மீண்டும் மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொல்பொருள் செயலணிக்கென மீண்டும் மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களையே நியமனம் செய்துள்ளதை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாணத்திற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணியானது 2020ஜுன் மாதம் 1ஆம் திகதியன்று உருவாக்கப்பட்டது.

இந்த செயலணி கிழக்கு மாகாணத்திற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு பெரும்பான்மையான தமிழர்களும் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்தவிடயத்தில் அக்கறை உடையவர்களும், அரசின் ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் ச.வியாழேந்திரன் ஆகியோரும் கூட தமிழர்களை தெரிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓய்வூதியம், இடமாற்றம் பெற்று சென்றவர்களுக்குப் பதிலாகவும் மேலும் புதிதாக ஐந்து பேர் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சிங்களவர்கள் மட்டும் தெரிவுசெய்யப்பட்டு வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்பொருள் செயலணியில் தமிழர்களையும் நியமிக்க வேண்டுமென ஆளும் தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் கூறியதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவ்வாறு தமிழர்களின் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை தமிழர்களாகிய நாங்கள் பல தசாப்தங்களாக எமது அடையாளச் சின்னங்களை, எமது அடையாளங்களை, தொல்பொருள் கலாசார பண்பாட்டை பாதுகாக்க முடியுமோ பாதுகாத்து வருகின்றோம்.

தமிழர்களுக்குரிய புராதன அடையாளங்களை விட்டுக் கொடுப்பதற்கு எச் சந்தர்ப்பத்திலும் துணை போக முடியாது எனவும் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.