January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செல்வச் சந்நிதி உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் நீதிமன்றம் தடை!

யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வளாகத்தில் – நீதிமன்ற உத்தரவை மீறாதபடி- திட்டமிட்டபடி நாளை சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதனை ஏற்பாடு செய்துள்ள தமிழ்க் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் மனுவின்படி, இந்தப் போராட்டத்தை தடைசெய்து பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஒத்த கருத்தில் இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

“தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் கூடி தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தோம்.

ஆனாலும் இன்று மதியம் வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து தடைக் கட்டளை ஒன்றை பெற்றிருக்கின்றனர்.

கொரோனா ஆபத்தை சுட்டிக்காட்டி பொலிஸார் வழங்கிய விண்ணப்பத்தினை ஏற்று நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியிருக்கின்றது. இந்த தடைக் கட்டளையில் பிரதிவாதிகளாக எவருடைய பெயரும் குறிப்பிடப்படாதபோதும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தடைக் கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது.

எனவே அதனை உரிய மரியாதையுடன் கவனத்தில் கொள்கிறோம். இந்த பின்னணியில் திட்டமிட்டபடி போராட்டத்தை எங்கு நடத்துவதென்பது தொடர்பில் ஒரு திட்டவட்டமான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

அதனடிப்படையில் நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் அதற்கான மரியாதைகளுடன் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக பின்பற்றப்பட்டு எமது போராட்டம் நடத்தப்படும்.

அதேவேளை முன்னர் அறிவித்ததைபோல் 28ஆம் திகதி வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பை இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் வேண்டி நிற்கிறோம்” என்றார் ஶ்ரீகாந்தா.