January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி ஊவா மாகாண ஆளுநரினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அந்த மாநகர சபையின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் விசேட ஆணையாளர் ஒருவரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர மேயருக்கு சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பதுளை மாநகர சபையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 5 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 9 உறுப்பினர்களும், ஜேவிபியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

இங்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தமையினால் பொதுஜன பெரமுனவுக்கு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.