January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இன்றும் வடக்கு, கிழக்கு தமிழர் பூமியில் இனப்படுகொலை இடம்பெறுகின்றது’

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான தமிழர் எழுச்சி பேரணி இடம்பெற்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதான பத்து கோரிக்கைகளை முன்வைத்து சிவில் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியானது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டது. இதில் குறித்த பத்து காரணங்கள் மாத்திரமே எமது பிரதான கோரிக்கைகள் அல்ல. மேலும் நான்கு உப கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் வடக்கு, கிழக்கு பூமி தமிழ் பேசும் மக்களின் தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். தமிழர்களுக்கான தனித்தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் கீழ் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமையையும் இன்னும் அது தொடர்கின்றது என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும்.

இனப்படுகொலை என்பது வெறுமனே இனத்தை கொல்வது மட்டுமல்ல, ஒரு சமூகத்தை இலக்கு வைத்து அவர்களின் அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலை என்றே கருதப்படும். 2009 ஆம் ஆண்டு வரையில் உயிர்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதை போலவே இப்போதும் திட்டமிட்டு வடக்கு, கிழக்கு தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலனித்துவ கொள்கையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தொல்பொருள் திணைக்களம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர்.இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்கள் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதும் இனப்படுகொலையாகும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.