November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் ஐநாவில் முறைப்பாடு

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கட்டாய ஜனாஸா எரிப்புக் கொள்கைக்கு எதிராக முஸ்லிம் குடும்பங்களின் குழுவொன்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொள்ளத் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதால் தமது மத உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் கட்டாய எரிப்புக்கு எதிராக பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் மற்றும் பிண்ட்மன்ஸ் சட்ட நிறுவனம் ஆகியன சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மரணித்த உடல்களின் ஊடாக கொரோனா தொற்று பரவாது என்று சர்வதேச மற்றும் இலங்கை நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையிலும், இலங்கை அரசாங்கத்தின் பலவந்த எரிப்பு நடவடிக்கை தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனாவால் மரணித்த உடல்களைக் கையாளும் விடயத்தில் இலங்கை முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரின் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.