July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசாங்கத்தில் இருக்க முடியாவிட்டால் வெளியேறலாம்” : வீரவன்சவுக்கு கோரிக்கை

அரசாங்கத்திற்குள் குழுப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாது அரசாங்கத்தை விட்டு வெளியேறி செல்லுமாறு ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் அமைச்சர் விமல் வீரவன்சவை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தில் கூட்டுத் தீர்மானங்களுடன் இணைந்து,பணியாற்ற முடியாவிட்டால் வீரவன்சவுக்கு அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என்று பொதுஜன பெரமுன உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை நியமிக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச ஊடகமொன்றுக்கு வெளியிட்ட கருத்தை தொடர்ந்து, அந்தக் கட்சி உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் விமல் வீரவன்ச ஜனாதிபதியையும் பிரதமரையும் மோதச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் விமர்ச்சித்துள்ளனர்.

இதனால் அவர் இந்தக் கருத்துக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்று கட்சியின் செயலாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் தான் மகிந்த அலையை உருவாக்கவும், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவை கொண்டு வரவும் முன்னின்று செயற்பட்டமை தவறு என்றால் மக்களிடம் மன்னிப்புக் கோரத் தயார் என்றும் வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, வீரவன்சவின் செயற்பாடுகள் அரசாங்கத்திற்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலேயே அமைவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவரை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டுமென்றே தமது கட்சியினரின் கோரிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி அவருக்கு வேண்டுமென்றால் அரசாங்கத்தைவிட்டு வெளியேறி எதிர்க்கட்சியின் பக்கத்தில் விமல் வீரவன்சவுக்கு புதிய அணியொன்றை அமைத்துக்கொள்ள முடியுமென்றும் நிமல் லான்சா குறிப்பிட்டுள்ளார்.