
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விஜயம் தமக்கு நியாயம் பெற்றுத்தர உதவ வேண்டும் எனவும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக அனுமதியை வழங்கும்படி இலங்கை அரசை அவர் வலியுறுத்த வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டி சந்தித்தப் போதே அவர்கள் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உட்பட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்குவாரங்கள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துக் கூறினர்.
அத்துடன், பாகிஸ்தான் இலங்கைக்கு செய்து வருகின்ற உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்த குழுவினர், இலங்கை வரும் பாக். பிரதமருடன், தாங்கள் சந்தித்துப் பேச, ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, உலகத்தின் 190 நாடுகள் கொவிட்19 தொற்றினால் மரணிப்பவர்களுடைய உடல்களை அடக்கம் செய்கின்ற போதிலும், இலங்கையில் மட்டும் கடும்போக்கு கொள்கையுடன், செயற்படுவதாகக் கட்சியின் தவிசாளர் அமீர் அலி தெரிவித்தார்.
இச்சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.