சம்பள நிர்ணய சபையின் ஊடாக ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை ஊடாக வருடாந்தம் 69 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
750 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்ட போது வருடத்திற்கு 300 நாட்களுக்கு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. அப்போது தொழிலாளர் ஒருவர் வருடத்திற்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் பெற்றார்.
ஆனால் தற்போதைய முறைமையில் வருடத்திற்கு 156 நாட்களே வேலை வழங்கப்படவுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. இதனூடாக தொழிலாளர்களுக்கு ஒரு இலட்சத்து 56 ஆயிரம் ரூபாவே கிடைக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சம்பள நிர்ணய சபையின் ஊடாக தீர்மானம் எடுக்கப்படுவதால் கூட்டு ஒப்பந்த முறை இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனூடாக தொழிலாளர்கள் தமது உரிமை சார்ந்த சலுகைகளை இழக்கும் நிலைமை உருவாகியுள்ளதாகவும், இதனால் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கும் போது, மாதத்திற்கு குறைந்தது 25 நாட்கள் வேலையுடன், அவர்களின் சிறப்புச் சலுகைகளையும் உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.