November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஸ்லிம் விவாக- விவாகரத்து சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்தார் ரதன தேரர்

இலங்கை விவாக- விவாகரத்து சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் இன்று இப்பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் காதி நீதிமன்றங்கள் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றதுடன், பெண்களின் உரிமை மட்டுமல்லாது, சிறுவர் உரிமைகளும் பறிக்கப்படுகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் விவாக- விவாகரத்து சட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 10 வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்ற நிலையில், அவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து என்பன முஸ்லிம் சட்டத்தின் கீழ் கையாளப்படுகின்றதாகவும் இவ்வாறான தனியார் சட்டங்களால் மனித உரிமைகள் மீறப்படுகின்றதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காதி நீதிமன்றங்கள் மூலம் அரசியல் அமைப்பின் 12(1) சரத்தின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து தீர்மானம் எடுப்பது நீதி அமைச்சரா அல்லது ஜம்இய்யதுல் உலமா சபையா என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் ரதன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.