January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக் கிரகப் போராட்டம்

வவுனியா, பூந்தோட்டம் ஸ்ரீநகர் கிராம மக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பல வருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர், அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டபோதும் தமது  விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளால் பலமுறை வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

எனவே தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு பிரதேச செயலாளர் ந.கமலதாசன், பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் ஆகியோர் சென்றிருந்ததுடன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இந்நிலையில், முதற்கட்டமாக கிராமத்தில் உள்ள 95 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதாக தெரிவித்த பிரதேச செயலாளர், ஏனைய காணிகள் குளத்தின் ஒதுக்கத்திற்குள் வருவதால் அதற்குறிய திணைக்களம் காணிகளை விடுவித்து தந்தால் அதற்கான உறுதிகளையும் வழங்கமுடியும் என தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.