
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சியின் ஆரம்ப உறுப்பினராக இருந்தது தவறாயின், நாட்டு மக்களிடம் தான் மன்னிப்புக் கோரத் தயாராக உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வீமல் வீரவன்ச நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நீக்கப்பட்டு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று அண்மையில் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்சவின் கருத்துக்கு ஆளும் கட்சியில் கடுமையான விமர்சனங்கள் மேலெழுந்துள்ளதோடு, அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமைப் பதவியில் மகிந்த ராஜபக்ஷ இருக்கக் கூடாது என்று தான் கருதவில்லை என்றும் ஜனாதிபதிக்கு கட்சியில் உயர் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்றே தான் கூறியதாகவும் விமல் வீரவன்ச தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோன்று, வேறு கட்சிகள் குறித்து பேச வேண்டாம் என்று இலங்கையின் அரசியலமைப்பின் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கட்சியில் வெளிநாட்டு புலனாய்வுச் சேவைகளில் இருந்து ஊதியம் பெறும் இருவர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அமைச்சர் விமல் கேட்டுக்கொண்டுள்ளார்.