இலங்கை மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்களைக் கைதுசெய்து, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளின் உடற்பாகங்கள் இந்து மயானத்தில் அடக்கப்பட்டதோடு ஏற்பட்ட பதற்ற சம்பவம் குறித்த வழக்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் அடக்கம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட 5 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயக ரீதியான போராட்டத்தில் மக்கள் மீது பொலிஸாரே தாக்குதல் நடத்தியதாகவும், கலகம் விளைவித்தாக தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வியாழேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய வங்கி கொள்ளை மற்றும் ஏப்ரல் 21 தாக்குதல் போன்றவற்றுக்குக் காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.