
இலங்கையில் 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது இறுதிப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதிக்கு வடக்கில் பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர். படையினர் போர்க்குற்றம் இழைக்கவில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஜெனிவாவில் இம்முறை கடுமையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உலகில் இன்றளவிலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ஜெனிவா சென்று பொய்யுரைப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். இலங்கையின் இறைமை மற்றும் சுயாதீனத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என்பதே அவர்களின் வலியுறுத்தலாக இருக்கின்றது. இதற்கு உடன்பட முடியாது என நாம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டோம்.
போரில் நாம் வெற்றி பெறும்போது இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகாவே செயற்பட்டார். அவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வெற்றிபெற வைப்பதற்காக வடக்கில் வாக்குக் கேட்டனர். இதன்படி வடக்கில் மட்டும் எம்மைத் தோற்கடித்து அங்கு சரத் பொன்சேகாவே வெற்றி பெற்றார்.
படையினர் போர்க்குற்றம் இழைக்கவில்லை என்ற சான்றே அதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.