November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐ.நாவின் அழுத்தத்தை வலிந்து அதிகரிக்கின்றது ராஜபக்ச அரசு’

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, இலங்கை மீது மேலும் அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய வகையிலேயே ராஜபக்ச அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியால் அண்மையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள டி.எஸ்.குணசேகர என்ற நிறுவனத்தின் ஊடாக ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானோரால் செய்யப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் ஆதாரங்கள் எமக்கு கிடைத்துள்ளன.

இந்த நிறுவனத்துக்கு 3.1 பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்தக் கடன் தொகை உரிய நேரத்தில் மீளச் செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச வங்கிகள் பாரிய நட்டம் அடைந்துள்ள போதிலும் ராஜபக்ச குடும்பத்தினர் இலாபமீட்டிக் கொண்டுள்ளனர்.

அநாவசியமான விடயங்களுக்கு ஆணைக்குழுக்கள் அமைப்பதை விட இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கை மீது மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலேயே ராஜபக்ச அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.ஆணைக்குழுக்கள் ஊடாக மக்களின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தெரிந்து கொண்டே அரச தரப்பினர் மீண்டும் தவறிழைக்கின்றனர்.

ராஜபக்சவின் கடந்த ஆட்சியில் லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜுதீன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டு பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் மறக்க முடியாதவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.