தமிழர்களுக்காக நீதி கோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்த தமிழர் எழுச்சி பேரணி கொவிட் -19 விதிமுறைகளுக்கு முரணானதாயின் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர், மனித உரிமைகள் இன்றும் பறிபோய்க்கொண்டுள்ளது, மனித உரிமை மீறல்களை செய்யும் இராணுவம் இலங்கையில் உள்ளதென புலம்பெயர் அமைப்புகளும் சர்வதேச அமைப்புகளும் கூச்சலிட்டுக்கொண்டு இருந்தாலும், அல்லது சர்வதேச புலம்பெயர் அமைப்புகளின் பணத்திற்காக இலங்கையில் இருந்துகொண்டு செயற்படும் நபர்கள் கூறிக்கொண்டு இருந்தாலும் எமது வேலைத்திட்டம் என்ன என்பதில் நாம் தெளிவாக உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வடக்கில் பேரணி ஒன்றினை நடத்தியுள்ளனர். ஜனநாயக நாடாக உள்ள காரணத்தினால் இந்த பேரணிக்கு நாம் எந்தவித தடைகளும் விதிக்கவில்லை.ஆனால் இவ்வாறான கூட்டங்களை நடத்த முன்னர் தற்போது நாட்டின் கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளை கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது பேரணியொன்று இடம்பெற்று முடிந்துள்ளது. கூட்டங்களை நடத்த முன்னர் தற்போது நாட்டின் கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் சட்ட கோவைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை மீறிய வகையில் இவ்வாறான கூட்டங்கள் இடம்பெறும் என்றால் அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.