File photo : Facebook/vadivel suresh
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகளினால் தாம் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 13 நாட்கள் மாத்திரம் வேலை வழங்கப்படும் எனவும், ஏனைய கொடுப்பனவுகள் சலுகைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற கோரிக்கையும் அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்துள்ளன.
இதனை அடுத்து தொழிற்சங்கங்கள் பாரிய குழப்பத்தில் இணக்கம் ஒன்றினை எட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆயிரம் ரூபா கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் அதற்கான நிபந்தனைகளில் நாம் தோற்றுள்ளோம் என்றே கருதுவதாகக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இப்போது எம்மால் நிதானமான நிலையில் கருத்துக்களை முன்வைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது எனக் கூறிய வடிவேல் சுரேஷ், தடுமாற்றத்தில் தொழிற்சங்கங்கள் உள்ளன என்றார்.
அடுத்த 14 நாட்கள் ஆட்சேபனை காலம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளையும், மறுப்புகளையும் முன்வைக்க வேண்டும் எனவும் கூறினார்.
எனவே உடனடியாக மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைந்து 14 நாட்களுக்குள் கூட்டமொன்றை நடத்தி எமது தரப்பு கோரிக்கையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நான் முன்னின்று இந்த கடமையைச் செய்ய தயாராக உள்ளேன். எனவே உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.