May 23, 2025 22:09:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மட்டக்களப்பு காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடியேற்றங்களை அமைக்க முயற்சி’

மட்டக்களப்பு மாவட்டம், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை என்கின்ற மாங்கேணி கிராம சபைக்குட்பட்ட தெற்கு பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த மக்களை குடியேற்றுவதற்கான செயற்திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

குறிப்பாக, அந்த பகுதியில் குடியிருந்த சிங்கள மக்கள் 1985 ஆம் ஆண்டு யுத்த சூழல் காரணமாகக் இடம்பெயர்ந்ததாகக் கூறியே குடியேற்ற முயற்சிகள் இடம்பெறுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த 178 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதற்கான பல ஆதாரங்கள் தங்களிடம் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது, தான் காணி அமைச்சருடன் பேசி தடுத்து நிறுத்தியதாகவும், திம்புலாகல தேரரால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த திட்டம் 2015 ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கும்போது, பொய்யான ஆவணங்கள் எனக்கூறி நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய்யான முறையில் சிங்கள மக்களைக் குடியேற்றி, மட்டக்களப்பில் சிங்கள மக்களின் குடிசன தொகையை அதிகரிப்பதற்கும், அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்குமே இந்தத் திட்டம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த போலிச் செயற்பாட்டை நிறுத்துவதற்காக தான் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.