தேயிலை நிர்ணய விலை குறைவாக உள்ளமையினால் வரவை மீறிய செலவுகளை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதேநேரம் தற்போதுள்ள நிலைமை எந்த வழிமுறையிலும் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டங்களை நாம் கண்காணித்தே வருகின்றோம். இந்த விடயத்தில் வெறுமனே தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அப்பால் அரசியல் செயற்பாடுகளே இடம்பெற்று வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் அழுத்தங்களும், மக்களை குழப்பும் நடவடிக்கைகளுமே முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க அழுத்தங்களினால் பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஒப்பந்தத்தில் நாம் கையொப்பமிட்டால், பின்னர் சம்பள நாளன்று மிகப்பெரிய நெருக்கடியை நாம் அனைவரும் சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரித்தால் ஒரு கிலோகிராம் தேயிலையின் உற்பத்தி செலவானது 830 ரூபாவில் இருந்து 825 ரூ. வரையில் நிர்ணயிக்கப்படும்.
ஆனால் தற்போதைய நிலையில் தேயிலையை கொழும்பு தேயிலை ஏலத்தில் ஒரு கிலோகிராம் 580 ரூ. என்ற அடிப்படையில் விற்கின்றோம்.
எனவே வருமானம் குறைவாக உள்ள நிலையில் தற்போது தொழிற்சங்கங்கள் கேற்கும் ஆயிரம் ரூபாவை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்ற கேள்வி உள்ளது.
எமக்கும் முறையான பராமரிப்புகள் இல்லாது போகும், தொழிலாளர்களும் நாளாந்த வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகும்.
எனவே யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு அனைவரும் இணக்கம் ஒன்றினை எட்ட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார்.