File Photo
யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியா இலங்கையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்த நிலையில் குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இருந்தும் இந்தியாவை நிராகரித்து சீனாவுக்கு கொடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் இந்த தீர்மானம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் எனவும் இந்திய இராஜதந்திர பிரதிநிதிகள் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளதுடன் அவர்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்கில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளிலேயே இந்தியாவின் முதலீட்டில் எரிசக்தி திட்டங்களை முன்னெடுக்க முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
உடன்படிக்கையாக எதுவும் செய்துகொள்ளாத போதிலும் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தை மட்டத்தில் இணக்கம் ஒன்றினை இரு தரப்பினரும் எட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இப்போது ராஜபக்ஷ அரசாங்கம் இந்த திட்டத்தை சீன நிறுவனங்களை கொண்டு செய்து முடிக்க தீர்மானித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்தியாவை அதிருப்தியடைய வைத்துள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவிற்கு கொடுத்துள்ள இந்த வேலைத்திட்டங்கள் வடக்கில் இருந்து இந்தியாவின் தென் கடல் எல்லையில் வெறுமனே 48 கடல் மைல் தூர இடைவெளியாக மாத்திரமே காணப்படுகின்ற காரணத்தினால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கேள்விக்கு உற்படுத்தும் செயற்பாடாக இவை அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.