July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு முனையம் குறித்த இந்தியாவின் முடிவு இரு வாரங்களில் அறிவிக்கப்படும்!

இலங்கை அரசாங்கம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முன்னைய உடன்படிக்கை குறித்த தீர்மானத்தை திடீரென மாற்றியுள்ளமை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களில் அறிவிக்கவுள்ளதாக இந்தியத் தூதுவர் அரச தரப்பிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டில் அபிவிருத்தி செய்ய உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது.

இதனிடையே கிழக்கு முனையம், முழுமையாகத் துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படும் என அரசாங்கம் திடீரென ஒரு தீர்மானத்தை அறிவித்தது.

இந்நிலையில், இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் மாற்றங்களைச் செய்வது ஆரோக்கியமானதாக கருதுவதாகவும், மேற்கு முனையத்தை இதே திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் பிரதமர் மற்றும் வெளி விவகார அமைச்சர் ஆகியோர் இந்தியத் தூதுவரிடம் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு, உடன்படிக்கையுடன் தொடர்புடைய இந்தியத் தரப்பிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளப் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறும் அவர்கள் இந்தியத் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இந்தியாவின் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களில் அறிவிப்பதாக இந்தியத் தூதுவர் அரச தரப்பிடம் தெரிவித்துள்ளார்.