January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வாக்குமூலங்கள் பற்றி மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டாம்”: மைத்திரிக்கு ஆணைக்குழு அறிவிப்பு!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் வாக்குமூலங்களுக்கு மறுப்பு அறிக்கை விடுப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு அந்த ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்கும் கொழும்பு மறைமாவட்ட உதவி ஆயர்களுக்கும் இதேபோன்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

அப்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து மைத்திரிபால சிறிசேன தரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. அவ்வாறே, பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கொழும்பு பேராயர் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தின் மூன்று ஆயர்களினால் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஆயர்கள் மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே அவர்கள் இப்படியான மறுப்பு அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.