July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: ‘மைத்திரி – ரணில் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கையெடுக்க பரிந்துரை’

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கையெடுக்குமாறு, அது தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்ளாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிஸ் ஆகியோருக்கு எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறும் அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் ‘சண்டே டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், சுற்றுலா ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடத்திய தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் 270 பேர் கொல்லப்பட்டதுடன், 500 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்திருந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அது தொடர்பாக விசாரிப்பதற்கென அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்திருந்தார்.

அந்த ஆணைக்குழுவினர் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட 457 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்திருந்ததுடன், அதனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கடந்த ஜனவரி 31 ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ‘சண்டே டைம்ஸ்’  தாக்குதல் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியாகியிருந்த போதும், அதனை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று  ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதானிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஏதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜனாதிபதியிடம் ஆணைக்குழுவினர் குறித்த அறிக்கையை கையளித்த பின்னர், அந்த அறிக்கையை நாட்டு மக்களுக்கு வெளியிடுமாறு, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஜனாதிபதியை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவருக்கு எதிராகவும் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கையெடுக்கப்படும் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.