திலீபன் நினைவேந்தலுக்கு விதித்திருந்த தடையை யாழ். நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர்கள் பலர் மனு தொடுத்திருந்தனர்.
திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.பீட்டர் போல் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை (செப்.14) அழைக்கப்பட்டது.பொலிஸாரின் விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு திலீபனின் நினைவேந்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு ஒத்திவைக்கப்பட்டு நீதவான் ஏ.பீட்டர் போல் முன்னிலையில் கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டத்தரணி கணதீபன், மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் இலங்கை குற்றவியல் நடைபடி சட்டக்கோவையின் 106 பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் இந்த வழக்கை பொலிஸார் தாக்கல் செய்தமை தவறு என்று சட்ட ஏற்பாடுகள், முந்தைய தீர்ப்புகளை வைத்து வாதாடினர்.
திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என நிரூபிக்க அவரது வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம், இன்று (செப்.24) வியாழக்கிழமை மீண்டும் ஆராய்ந்து தடையுத்தரவை நீடித்துள்ளது.
“மன்றினால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்படுகிறது. அதனை மேலும் நீடிக்க வேண்டுமாயின் சட்டம் ஒழுங்கு அமைச்சு (உள்ளகப் பாதுகாப்பு) வர்த்தமானி மூலம் அறிவிக்கவேண்டும்.
அதனால் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது” என்று நீதவான் உத்தரவிட்டார்.