பௌத்த மதகுரு எல்லாவல மேதானந்த தேரரை ஜனாதிபதி செயலணியில் நியமித்திருப்பது இலங்கையில் இனங்களுக்கிடையே பகை, முரண்பாட்டை தோற்று விப்பதற்கு வழி சமைக்கும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலணி உறுப்பினரான மேதானந்த தேரரின் கருத்தை கண்டித்து இரா.துரைரெத்தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தமிழர்களே வாழவில்லை எனவும், 99 வீதம் பௌத்த விகாரைகளே இருந்ததாகவும் அங்குள்ள தமிழர்களின் புனிதத் தலங்கள் பௌத்த மதத்திற்குரியதாகுமெனவும் தமிழர்களின் கலாசார ரீதியான வரலாற்றை திரிபுபடுத்திக் கூறுவதென்பது தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு பௌத்த மதகுரு தமிழர்களுக்கு எதிராக இவ்வாறு கூறுவதென்பது மதகுருவிற்கான பண்பாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நாட்டில் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு நிர்வாக ரீதியாக வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியும் அமுலாக்கப்படுள்ளமை இவர் போன்ற மதகுருமாருக்கு தெரியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தமிழர்களின் கலாசார பண்பாட்டை பிரதி பலிக்கின்ற சான்றுகள் உள்ள இடங்களையே திரிபுபடுத்தி மாற்ற முயற்சிப்பது ஆரோக்கியமான விடயங்களல்ல எனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் சுதந்திர தின உரையில் கூட பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான பேச்சுக்களே தென்பட்டது. எனினும் தமிழர்கள் இலங்கை பிரஜைகளாக சம உரிமையுடன் அதிகாரம் உள்ளவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் தமிழர்களின் வரலாற்றை திரிபு படுத்துகின்ற விடயங்களை கைவிடுமாறு விநயமாக கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.