இலங்கையில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்காக இந்துக் கோயில்கள் கைப்பற்றப்படும் அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்து தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பாரியளவில் பௌத்தமயமாக்கல் அவதானத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இதற்கெதிராக உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசரமாகத் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பாரம்பரிய விடயங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பாதுகாப்பு செயலணி, சிங்கள தேசியவாதிகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் 30 வருட யுத்தம் முடிவுக்கு வரும் போது, வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏராளமான பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும், போர் நினைவுச் சின்னங்களும் முளைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஜனாதிபதி செயலணி பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் நோக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தை முன்னிலைப்படுத்துவதல்ல என்றும் குருந்தூர் மலை உட்பட தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் பௌத்தமயமாக்கப்படுவது கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.