வவுனியா மொத்த மரக்கறி வியாபார சந்தையை பொலிஸார் திறக்க விடாததால், வீதியை மறித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா தினசரி சந்தை கடந்த சிலநாட்களாக கொரோனோ தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்ததுடன், காமினி மகா வித்தியாலயம் மற்றும் கண்டி வீதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் தற்காலிகமாக செயற்பட்டு வந்தது.
இதேவேளை சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பிசிஆர், அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் எவருக்கும் தொற்று அடையாளம் காணப்படவில்லை.
அத்தோடு மீண்டும் சந்தையை திறப்பதற்கு சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்ததுடன் நகரசபையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் சந்தையில் தொற்றுநீக்கமும் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றையதினம் சந்தையை திறப்பதற்காக வர்த்தகர்கள் வருகைத்தந்த போது பொலிஸார் சந்தையை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
நீண்ட நேரமாகியும் தீர்வு கிடைக்காமையால் ஹொறவபொத்தானை பிரதான வீதியை வழிமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதிபொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்தின ஆகியோர் அவர்களுடன் கலந்துரையாடினர்.
இதனையடுத்து, ஏனைய சில ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகளை விரைவாக செய்துவிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய போராட்டம் கைவிடப்பட்டது.