நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் தொடர்பாக எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தனது பாராளுமன்ற ஆசனத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு மீண்டும் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், 12 ஆம் திகதி வரையில் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனத்தை தற்போது உள்ளாவரே பேணுமாறு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளது.
தனது பாராளுமன்ற ஆசனத்தை திட்டமிட்டு இல்லாமல் செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் இது தேர்தல் சட்டத்தின் 64 ஆவது உறுப்புக்கமைய சட்ட விரோதமானது எனவும் ரஞ்சன் ராமநாயக்க தனது மேன்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.