File Photo : twitter /India in sri lanka
இந்திய மத்திய வங்கியிடம் அந்நிய செலாவணி சலுகையின் கீழ் இலங்கையால் பெற்றுக்கொள்ளப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மீள செலுத்தப்பட்டுள்ளதை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி கடன் தவணை நிறைவடைந்துள்ள நிலையில், உரிய காலப்பகுதியில் கடன் திரும்பி செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் (ECT) அபிவிருத்தி தொடர்பான 2019 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்தியா குறித்த கடன் தொகையை மீள செலுத்துமாறு கோரியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு குறித்த கடனை திருப்பி செலுத்துவதற்கான அவகாசம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் வரை இந்தியாவினால் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அரசாங்கம் கடனை செலுத்தியுள்ளது.
இதனிடையே, சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவரும் நிலையில் 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இம்மாதம் கிடைக்கவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.