July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக மக்கள் தமது பலத்தை காண்பித்துள்ளனர்”

அடையாள வேலை நிறுத்த போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர், எனவே திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு கிடைக்கலாம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொழிலாளர்களுக்கான ஊதிய உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். அந்தவகையில் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற நினைப்பில் கம்பனிகள் செயற்பட்டுவந்தன. இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை, பலம் என்பன காண்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல பொதுவான விடயம், நியாயமாக இருந்தால் இணைந்து போராடுவதற்கு தயார் என்ற தகவலையும் மக்கள் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான அறிவித்தல் திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை இ.தொ.காவின் பலத்தைக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. கம்பனிகளுக்கு எதிரானது. மக்கள் தமது பலத்தைக்காட்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.