July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்: முடங்கியது மலையகம்

ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இவர்களின் போராட்டத்திற்கு நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி ஆதரவு வழங்கியுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. தொழில் நிபந்தனைகள் அடிப்படையிலேயே சம்பள உயர்வை வழங்குவதற்கு அவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இதனால் சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். இதன்படி 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.

இந்நிலையில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமைய மலையகத்திலுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பன ஆதரவு தெரிவித்திருந்ததுடன் நகர வர்த்தகர்களும் கடையடைப்பு செய்துள்ளனர்.

This slideshow requires JavaScript.