அரச அடக்குமுறைகளுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டத்தின் இரண்டாவது நாள் பேரணி இன்று மட்டக்களப்பு தாழங்குடா தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்ட பேரணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு உட்பட அரச அடக்குமுறைகளை முன்னிறுத்தி, அவற்றைக் கண்டித்து, நீதி கோரி இந்த போராட்டம் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இரண்டாவது நாளில் பொது மக்கள் தாமாகவே போராட்டத்தில் இணைந்துகொள்கின்றதாகத் தெரியவருகின்றது.
போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறீதரன், இரா. சாணக்கியன் உள்ளிட்டோரும் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.