November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜனநாயக உரிமையை தடுப்பதற்கு எந்த சட்டத்திலும் இடமில்லை’ – முதல் நாள் பேரணி முடிவில் எம்.சுமந்திரன்

எங்களுடைய ஜனநாயக உரிமையை தடுப்பதற்கு எந்த சட்டத்திலும் இடமில்லை, இருந்தபோதும் அரச இயந்திரம், பொலிசார் ஊடாக தடை உத்தரவு பெறுவதை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் இன அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணி வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று பொத்துவிலில் ஆரம்பித்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் முடிவடைந்தது.

இதில் பங்கேற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டியும் சமூகங்களுக்கிடையே முறுகல்கள் ஏற்படும் என பொய்யாக காண்பித்தும் அரச தரப்பினர் சில நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளைப் பெற எத்தனிக்கின்றனர் என்றார்.

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையம் தொடர்பாக சில நாட்களாக பெரியதொரு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கின்றது. அதில் கொரோனா வைரஸ் தொற்றைப்பற்றி எவரும் கவலைப்படவில்லை, பொலிசாரும் எந்த நீதிமன்றத்தையும் நாடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் எங்கள் அடிப்படை உரிமைகளை நாங்கள் பெறவேண்டும் என ஜனநாயக ரீதியாக அகிம்சைவழியில் எவருக்கும் பாதகமில்லாமல் வீதியில் நடக்கின்ற போது அதற்கு எதிராக தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன் எந்தெந்த எல்லைக்குள் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்படுகின்றதோ அதை மதிப்போம் மீறமாட்டோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக திரண்டு பெரும் திரட்சியாக வடக்கை நோக்கி போகும் போது எவராலும் அதை தடுக்க முடியாது என மேலும் கூறினார்.

அதேவேளை விசேடமாக சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்கவேண்டும். அவர்களை திரும்பி பார்க்க வைக்கவேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் என்றுமே இல்லாதவாறு ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தடைகளை விதிக்க அரசாங்கம் முனைகின்றது இது மிகவும் கண்டனத்துக்குரியது என தெரிவித்த அவர் நாங்கள் முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து நாளையும் இதே இடத்திலிருந்து பேரணியை தொடருவோம் அனைவருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை என்றார்.