
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா இன்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்துள்ளார்.
கொழும்பு துறைமுக விவாகரத்தில் அரசாங்கத்தின் திடீர் மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகின்றது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களில் இந்தியா அதிருப்தியடைந்துள்ள நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் நேற்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்நிலையில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா இன்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தே கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை இணைந்து முன்னெடுக்கவிருந்த கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில், இலங்கை அரசாங்கம் திடீரென எடுத்துள்ள மாற்று தீர்மானங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஜப்பானுடன் ஏற்கனவே செய்துகொண்ட இலகு ரயில் சேவை அபிவிருத்தி திட்டத்தையும் இந்த அரசாங்கம் இரத்து செய்துள்ள நிலையில், தற்போது கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி விடயத்திலும் மாற்றங்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.