இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 28 ஆம் திகதி முதல் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆரம்பக்கட்டமாக இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் தடுப்பூசிகளை சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இதுவரையில் தடுப்பூசியால் பாரதூரமான விளைவுகள் எதுவும் ஏற்பட்டதாக சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளே தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் 3 இலட்சம் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து கொண்டு வரப்படவுள்ளதாகவும், அவை நாட்டுக்கு வந்த பின்னர் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டியவர்களுக்கு அவற்றை செலுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து மேலும் தடுப்பூசிகளை கொண்டு வர தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும், அவை வந்ததும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவற்றை வழங்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.