
இனிவரும் காலங்களில் பொது மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்களுக்கு கொவிட்- 19 தடுப்பூசிகளை வழங்குதல் அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி வழங்கப்படுதல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கப்படுவதற்கான முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தியை எமது உடலில் அதிகப்படுத்தி உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்பதாகும் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் முதற்கட்டமாக சுகாதார பிரிவினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது என அவர் கூறினார்.
அந்தவகையில், கொரோனா தடுப்பூசியை வினியோகத்தின் போது முதலில் கொரோனா நோயாளிகளுடன் கூடுதலாக தொடர்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.
இனிவரும் காலங்களில் குறிப்பாக வர்த்தகர்கள், வங்கி உத்தியோகஸ்தர்கள், பஸ் நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் என மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றார்.
அடுத்த கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுதல் அவசியம் எனவும் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.