November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் தடை உத்தரவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் நான்கு நாட்கள் வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் எல்லைக்குட்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்துவதற்கு யாழ். நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

அதற்கமைய  யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோருக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கும் இந்தத் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரச்சினைகளை ஏற்படுத்துதல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

இதேவேளை ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டதன் அடிப்படையில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.