கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் வெளிநாட்டு முதலீடுகளுக்காக வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையின் அரச தலைவர்களை அவசரமாகச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை நேற்று சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு மே மாதம் செய்துகொண்ட உடன்படிக்கையை இலங்கை பின்பற்ற வேண்டுமென்று இந்திய உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிழக்கு முனையத்தை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படுவதற்கு துறைமுக தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இந்த யோசனையைக் கைவிடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், துறைமுக விடயத்தில் இலங்கையின் தீர்மானம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாக அமைய வேண்டுமென இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
வெளிநாட்டு கடனுதவிகளைப் பெறுவதைவிட, நாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதே தனது நோக்கமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.