July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணை வேண்டும்’: புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச பொறிமுறையும் ஈடுபாடும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டணியான பசுமைத் தாயகம் மன்றம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போருக்குப் பின்னரான நிலைமாறுகால நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய தீர்மானத்துக்கு 46 ஆவது ஐநா அமர்வில் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடர சர்வதேச சுயாதீன பொறிமுறையொன்று நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஐநா தீர்மானத்தில் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நிலையான அரசியல் தீர்வொன்றைக் கண்டறிவதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும் என்று பசுமைத் தாயகம் மன்றம் தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் போன்றன தொற்று நோய் சவால்களுக்கு மத்தியிலும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குக் குரல்கொடுப்பதையிட்டு, தமிழ் புலம்பெயர் அமைப்புகள் நன்றிகளையும் தெரிவித்துள்ளன.